லிபரான் அறிக்கை: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
திங்கள், 23 நவம்பர் 2009( 17:31 IST )
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள லிபரான் ஆணையத்தின் அறிக்கை வெளியானது தொடர்பாக, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
லிபரான் அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
நடப்பு கூட்டத்தொடரில் லிபரான் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு அறிவித்தபோதிலும், அந்த உறுதியை பாஜக உறுப்பினர்கள் ஏற்கவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு எதிராக லிபரான் ஆணைய அறிக்கையில் குற்றம்சாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
நாடாளுமன்றத்தின் அவை உரிமைகளை மீறும் வகையில் அரசு. லிபரான் ஆணைய அறிக்கையை வெளியிட்டிருப்பதாகக் கூறி பாஜக, சமாஜ்வாடி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்டனர்.
கரும்பு விலை கொள்கை பிரச்சினையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போராடியதைக் குலைக்கும் வகையில், அரசின் உயரதிகாரிகளால் வேண்டுமென்றே லிபரான் அறிக்கை அவைக்கு வெளியே அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாஜக மக்களவைத் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட 10 நாட்களில் நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
வாஜ்பாய்க்கும் எதிராகவும் லிபரான் ஆணையத்தில் குற்றச்சாற்று கூறியிருப்பதாக வெளியான செய்திகளைப் பார்த்து தாம் அதிர்ச்சி அடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறினார்.
அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், லிபரான் அறிக்கையும், அறிக்கை வெளியானது குறித்த நடவடிக்கை அறிக்கையும் நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
காலையில் இரு அவைகளும் கூடியது முதலே அமளி நீடித்ததால், 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, அலுவல் ஏதும் நடைபெறாமலேயே நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.