சட்ட விரோத சுரங்க பணிகள்: ரோசையாவிற்கு தெலுங்கு தேசம் கெடு
சனி, 21 நவம்பர் 2009( 19:32 IST )
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நாடக அமைச்சர் ஜி. ஜனார்த்தன ரெட்டிக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் சட்டவிரோத சுரங்கப் பணிகளை ஆந்திர முதல்வர் கே.ரோசய்யா தடுத்து நிறுத்தவேண்டும்; இல்லையெனில் அவர் பதவி விலக வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி கெடு விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
''ஒபுலாபுரம் சுரங்கத்திலிருந்து கள்ளத்தனமாக இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதி செய்வதற்காக கிருஷ்ணபட்டணம் துறைமுகத்துக்கு லாரிகளில் கடத்தி வரப்படுகின்றன. இது தொடர்ந்தால் இந்த லாரிகளை தடுத்து நிறுத்தவும் தெலுங்கு தேசம் தயங்காது. சுரங்கத் தொழில் மாஃபியா கும்பல் அனைவரையும் பணம் கொடுத்து வாங்கி அதிகாரம் செலுத்தி வருகிறது'' என்றும் அவர் கூறியுள்ளார்.