கொச்சி: லஸ்கர் அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ரானா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சி வந்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் 2 நாள் தங்கியிருந்திருப்பது தெரியவந்துள்ளதாக கேரள போலீஸ் டி.ஜி.பி. ஜேக்கப் புன்னோஸ் கூறினார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைது செய்யப்பட்ட மற்றொரு அமெரிக்கரான டேவிட் ஹெட்லி கேரளா வந்ததாக தகவல் ஏதும் இல்லை என்று கூறினார்.
ரானாவின் பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை ஆவணங்கள் சோதிக்கப்பட்டு வருவதாகவும் ஜேக்கப் தெரிவித்தார்.
கொச்சிக்கு ரானா எதற்காக வந்தார்? என்ற விவரம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், கேரள மாநில காவல்துறையினருக்கு கிடைக்கும் தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள லஸ்கர்-ஈ-தோய்பா அமைப்பின் சதியில் டேவிட் ஹெட்லிக்கு தொடர்பிருப்பதாக எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.