ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் முன்னேறு ஆற்றுப் பாலத்தில் அமிலம் ஏற்றி வந்த டேங்கர் லாரியும், மின்மாற்றிகளை (transformers) ஏற்றி வந்த லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு லாரிகளும் தீப்பற்றிக் கொண்டன.
டேங்கர் லாரி ஓட்டுநர் முன் கேபினில் இருந்து உயிருக்குப் போராடியது பரிதாபத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லாரியின் பின் பக்கம் அமிலம் எரிந்து ஜூவாலையாகக் காணப்பட்டது.
என்றாலும் தீக்காயங்களுடன் ஓட்டுநரை காவல்துறையினர் வெளியே மீட்ட போதிலும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
மின்சார டிரான்ஸ்பார்மர்களை ஏற்றி வந்த லாரி ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அமிலம் ஏற்றி வந்த லாரியோ வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து நடத்த இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரு லாரிகளின் ஓட்டுநர்களின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.