முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » நெருக்குதலுக்கு அரசு பணிந்தது; கரும்பு விலை குறித்த புதிய மசோதா (Deadlock over sugarcane ordinance ends as Govt. bows to Opposition pressure)
நெருக்குதலுக்கு அரசு பணிந்தது; கரும்பு விலை குறித்த புதிய மசோதா
வெள்ளி, 20 நவம்பர் 2009( 20:01 IST )
கரும்பு விலை நிர்ணய அவசரச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அரசு புதிய் மசோதா ஒன்றை திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
கரும்பு விவசாயிகளிடம் பெறப்படும் கரும்புக்கான நிலுவைத்தொகையை மாநில அரசுகளுக்குப் பதிலாக சர்க்கரை ஆலைகளுக்கு மாற்ற புதிய மசோதா வகை செய்கிறது.
கரும்பு விலை நிர்ணயம் குறித்த அவசரச் சட்டத்திற்கு பாஜக, சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவும் எதிர்த்தது. இதனால் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதில் சிக்கல் நீடித்தது.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் திரண்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதுடெல்லியில் இன்று முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில், தீர்வு எட்டப்பட்டது.
மத்திய அரசின் புதிய மசோதாவின்படி, கரும்புக்கான மாநில அரசின் பரிந்துரை விலையை தொடர்ந்து கடைபிடிப்பது என்றும், விவசாயிகளுக்கான நியாயமான விலையில் (FRP) உள்ள வேறுபாட்டை சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தில் விவசாயிகளுக்கான வேறுபாட்டுத் தொகையை மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட கரும்பு கட்டுப்பாட்டு உத்தரவில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது அவசரச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதா கொண்டுவரப்பட உள்ளது.
புதிய மசோதாவானது மாநில அரசுகளின் சுமையை சர்க்கரை ஆலைகளுக்கு மாற்ற வகை செய்கிறது.
பாஜக மக்களவைத் துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், ஆர்.எல்.டி தலைவர் அஜீத் சிங் ஆகியோர் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.