மும்பை ஐ.பி.என் அலுவலகம் மீது தாக்குதல்; சிவசேனாவினர் அட்டூழியம்
வெள்ளி, 20 நவம்பர் 2009( 17:49 IST )
மும்பையில் உள்ள ஐ.பி.என் 7 மற்றும் ஐ.பில்.என் லோக்மாத் அலுலகத்தில் புகுந்து சிவசேனா தொண்டர்கள் இன்று தாக்குதல் நடத்தினார்கள்.
அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்களை அடித்ததுடன், அவர்களின் உடைகளையும் கிழித்தனர்.
மும்பை விக்ரோலியில் உள்ள ஐ.பி.என். நெட்வொர்க்கின் கீழ் வரும் ஐ.பி.என் 7 (ஹிந்தி), ஐ.பி.என். லோக்மாத் (மராட்டி) அலுவலகம்.
இந்த அலுவலகத்தில் இன்று பிற்பகலில் புகுந்த சிவசேனா தொண்டர்கள் சிலர், அங்கிருந்தவர்களை தாக்கி விட்டு, அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
சிவசேனாவை விமர்சிப்பதை தங்களால் ஏற்க முடியாது என்று கலவரக்காரர்கள் கூறியதாக தாக்குதலின் போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக சிவசேனா தொண்டர்கள் 7 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லோக்மாத் ஆசிரியர் நிகில் வாக்லேவை தேடுவதாகவும், அவருக்கு பாடம் கற்பிக்க விரும்புவதாகவும் அலுவலகத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறியதாக சந்தீப் சவான் என்ற பத்திரிகையாளர் தெரிவித்தார்.
சிவசேனா தொண்டர்கள் அனைவரும் இரும்புக் கம்பிகள், பந்து அடிக்கப் பயன்படும் மட்டைகள், கிரிக்கெட் ஸ்டம்புகளை கைகளில் வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
அசோக் சவான் கண்டனம்:
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறினார்.
பத்திரிகையாளர்களை தாக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்றும், தாக்குதலில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவான் குறிப்பிட்டார்.