சந்திரயான் – 2 திட்டம் 2012-13இல் நிறைவுபெறும்: அண்ணாதுரை
சனி, 7 நவம்பர் 2009( 17:21 IST )
நிலவின் கனிம வளத்தை ஆராய இந்தியா செலுத்தவுள்ள சந்திரயான்-2 விண்கலத் திட்டம் 2012-13இல் நிறைவடையும் என்று அதன் திட்ட இயக்குனர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வராயா பொறியியல் கல்லூரியின் தேச மாணவர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, ரூ.425 கோடி செலவில் உருவாக்கப்படும் சந்திரயான்-2 உடன் அனுப்பப்படும் இரண்டு ரோவர்கள் (நிலவில் இறக்கப்பட்டு ஒடி ஆராயும் இயந்திரங்கள்) நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்து, அது குறித்த தகவல்களை நிலவை வலம் வரும் சந்திரயானிற்கு அனுப்பும் என்று கூறியுள்ளார்.
“சந்திரயான்-2 நிலவைச் சுற்றும் விண்கலமும், நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் இரண்டு ரோவர்களையும் கொண்டதாகும். ஒரு ரோவர் இந்தியாவுடையது, மற்றொன்று ரஷ்யாவுடையது. இந்த இரண்டு ரோவர்களும் நிலவின் தரையில் இறக்கப்படும். இவைகள் நிலவின் மண், பாறை மாதிரிகளை எடுத்து வேதி ஆய்வு செய்து, அதன் விவரத்தை நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயானிற்கு அனுப்பி வைக்கும்” என்று கூறிய அண்ணாதுரை, சந்திரயான் -2 திட்டம் 2012-13இல் நிறைவடையும் என்று கூறியுள்ளார்.