தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » தேசியக் கொடி ஏற்றுதலை முன் நிபந்தனையாக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு (National flag hoisting cannot be bail condition - SC)
Feedback Print Bookmark and Share
 
தேசியக் கொடியை ஏற்று என்று பிணைய விடுதலைக்கு நிபந்தனையை விதித்து ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

ஈழத் தமிழர்களை இனப் படுகொலைச் செய்யும் சிறிலங்க அரசிற்கு இந்திய அரசு இராணுவ உதவி செய்வதைக் கண்டித்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், பாரதி ஆகியோர் இந்திய தேசியக் கொடியை எரிக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 188, 341 ஆகிய பிரிவுகள் கீழும், தேசிய சின்னங்கள் அவமதிப்பு (தடுப்புச்) சட்டப் பிரிவு 2இன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தங்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று கோரி இவர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி, பிணைய விடுதலைப் பெற்றப் பிறகு, இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் முன்பு ஒரு கழியை நட்டு, அதில் தேசியக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், ஏதாவது ஒரு ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாது என்றும், வழக்கு விசாரணைக்குத் தடையாக எதையும் செய்யக் கூடாது என்பதைத் தவிர, வேறு எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்க முடியாது என்று இவர்கள் செய்த முறையீடு நிராகரிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விதித்த நிபந்தனையை எதிர்த்து இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் உடனடி விசாரணை மனுச் செய்தனர். இவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி வாதிட்டார்.
தேசியக் கொடியை மதிப்பது தன்னிச்சையான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, அதனை ஒரு நிபந்தனையாகவோ கட்டாயமாக்கவோ கூடாது என்று ராம் ஜேத்மலானி வாதிட்டார்.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு இன்றுத் தீர்ப்பு அளித்தது.

“பிணைய விடுதலை பெறுபவர்கள் ஏதாவது ஒரு ஆசிரமத்திற்குச் சென்று 3 மணி நேரம் சேவை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் நிபந்தனை முழுமையாக சட்டத்திற்குப் புறம்பானது. தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் விதித்துள்ள பிணைய விடுதலை நிபந்தனை ஒரு முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது” என்று தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழரசன், பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணைய விடுதலைப் பெற மீண்டும் மனுச் செய்வார்கள் என்று தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தியாகு தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்