ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா ஊழல் வழக்கில் முதல் கைது நடவடிக்கையாக அவரது உதவியாளர் பினோத் சின்ஹாவின் சகோதரர் விகாஸ் சின்ஹாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விகாஸ் சின்ஹாவிற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹவாலா பண பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விகாஸிடம் முதலில் ஜாம்ஷெட்பூரிலும், பின்னர் ராஞ்சியிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
ஜாம்ஷெட்பூரில் உள்ள விகாஸ் சின்ஹாவின் அலுவலகத்தில் இருந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மோசடி தொடர்பான ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
பினோத் சின்ஹா தற்போது தலைமறைவாகி விட்டார். சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதில் பினோத் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் மதுகோடாவும், அவரது கூட்டாளிகளும் பல கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களையும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
வருமான வரித்துறையினர் அந்த ஆவணங்களை அமலாக்கப்பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
சுவிஸ் வங்கி தவிர தாய்லாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் மதுகோடாவும், அவரது கூட்டாளிகளும் முதலீடு செய்திருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
துபாயில் முதலீட்டிற்காக 550 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ததையும், மதுகோடாவின் கூட்டாளி நொய்டாவில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக 4 ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தியதையும் அமலாக்கப்பிரிவினர் கண்டறிந்தனர்.
மதுகோடாவுக்கு நெருக்கமான 6 பேருக்கு வருமான வரித்துறை விதித்த கெடு இன்று காலை 11 மணியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.