மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் புதிய அரசு நாளை பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
பெங்களூரில் நேற்றிரவு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருமான பிரபுல் பட்டேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போதைய இழுபறி நிலைமை நாளைக்குள் (இன்றைக்குள்) முடிவுக்கு வந்துவிடும். இலாகா பங்கீட்டுப்பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது. மந்திரிசபை அமைப்பது சுமூகமாக நடைபெறும்” என்றார்.
இதே போன்று மும்பையில் அரசு தலைமைச்செயலகத்தில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்ற முதல்வர் அசோக் சவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களிடையே (காங்.- தேசியவாத காங்.) எந்த உள்மோதலும் இல்லை. கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் ஆளுநரின் கருத்தை மதிக்கிறோம். அடுத்த 48 மணி நேரத்தில் புதிய அரசை அமைப்போம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே இலாகா பங்கீட்டில் இன்று உடன்பாடு ஏற்பட்டு, இரு கட்சித் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து அரசு அமைக்க முறைப்படி உரிமை கோருவார்கள். அதையடுத்து புதிய அரசு அமைக்க முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசோக் சவானுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். அதைத் தொடர்ந்து நாளை புதிய அரசு பதவி ஏற்கும் என நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.