எடியூரப்பாவுடன் டெல்லியில் இன்று பா.ஜ தலைவர்கள் ஆலோசனை
பெங்களூரு, வியாழன், 5 நவம்பர் 2009( 10:44 IST )
கர்நாடக பா.ஜ அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெல்லியில் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் கட்சியின் தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
கர்நாடகத்தில், பா.ஜ. அரசில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் விசுவரூபம் எடுத்து உள்ளது. முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கியே தீரவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் அதிருப்தி அமைச்சர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி சகோதரர்கள், அவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரை முதலமைச்சராக்க விரும்புகிறார்கள்.
அதிருப்தி அமைச்சர்களுடன் பா.ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி, பெங்களூருவில் 3 நாட்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், எல்.கே.அத்வானி, அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் ரெட்டி சகோதரர்களுடன் 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் சுஷ்மா சுவராஜ் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் வீட்டில் இன்று நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் எடியூரப்பா, அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
எடியூரப்பா அரசுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுமா? என்பது டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.