பழங்குடியினரை தனிமைப்படுத்தியதே ஆபத்தாகிவிட்டது: மன்மோகன் சிங்
புதன், 4 நவம்பர் 2009( 19:58 IST )
நமது பொருளாதார வாழ்வில் பழங்குடியினருக்கு உரிய இடத்தை நாமே தராததும், பல பத்தாண்டுகளாக அவர்களைத் தனிமைப்படுத்தியதும் ஒரு அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற பட்டியல் பழங்குடியினர், பாரம்பரியமாக வனத்தில் வாழ்வோர் உரிமை, நலன் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றியப் பிரதமர் மன்மோகன் சிங், நமது நாட்டின் பழங்குடியினரை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் திட்டமிட்டுச் சுரண்டும் நடவடிக்கைகளை இதற்கு மேலும் அனுமதிக்க முடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.
“அவர்களின் வாழ்வையும் மேம்படுத்தியிருக்கக்கூடிய நவீன பொருளாதார நடவடிக்கைகளில் பழங்குடியினருக்குரிய பங்களிப்பதில் நாம் தோற்றுவிட்டோம். பல பத்தாண்டுகளாக தொடர்ந்த இப்படிப்பட்ட தனிமைப்படுத்தல் இன்று ஒரு அபாயகரமான திருப்பதை நமது நாட்டின் சில பகுதிகளில் ஏற்படுத்திவிட்டது. பொருளாதார, சமூக ரீதியாக மிகத் தெளிவாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுவந்த இந்தச் சுரண்டலை இதற்கு மேலும் சகித்துக் கொள்ள முடியாது” என்று கூறிய பிரதமர், அதற்கு மாற்று வன்முறைப் பாதையல்ல என்றும் கூறினார்.
துப்பாக்கி நிழலில் சாத்தியமில்லை!
“அதே நேரத்தில் எந்தவொரு தொடர்ச்சியான முன்னேற்ற நடவடிக்கையும் துப்பாக்கியின் நிழலில் சாத்தியமில்லை. அவர்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்வோரிடமும் எந்த ஒரு மாற்றுப் பொருளாதாரத் திட்டமும் இல்லை. வன்முறை கலாச்சாரம் சாதாரண மக்களின் வாழ்வை மேலும் துயரமாக்கிவிடும். எனவே இந்தச் சவாலை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையைச் சகித்துக்கொள்ளாத அதே வேளையில், முன்னேற்றத்தின் பயன் பழங்குடியினரை சென்றுச் சேர வேண்டும். அவர்களின் வாய்க்கும், இதயத்திற்குமாக இந்தப் போரை நாம் வெற்றிகொள்ள வேண்டும்” என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை கோடிட்டுக் காட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
பழங்குடியினர் வாழ்வை மேம்படுத்த தேச பழங்குடியினர் கொள்கை (National Tribal Policy) ஒன்றை வகுக்கப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் முடிவெடுத்துள்ளதை வரவேற்பதாகக் கூறிய பிரதமர், நமது நாட்டின் பழங்குடிகள் சந்தித்துவரும் பிரச்சனைகள் மிகச் சிக்கலானவை என்றும், அவற்றை ஆழமான புரிதலுடனும், இதயப்பூர்வமாகவும் அணுக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நமது நாட்டில் பல்வேறு இடங்களில் வாழும் பழங்குடியினரிடையே சென்று விவாதித்து, அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதனடிப்படையில் தேச பழங்குடியினர் கொள்கையை வகுக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்ட பிரதமர், பழங்குடியினருக்கு ஆறுதலான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், அவர்களை முன்னேற்றத் திட்டங்களில் பங்கேற்கச் செய்வது மிக மிக அவசியமானதாகும். ஆனால் அதனை அவர்களின் பண்பாட்டை சிதைக்கூடியதாகவோ அல்லது அவர்களை சுரண்டுவதாகவோ இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.