முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » வந்தே மாதரத்திற்கு எதிராகத் தீர்மானம்: தனக்குத் தெரியாது என்கிறார் ப. சிதம்பரம்! (HM does not know resolution passed against Vande Mataram)
வந்தே மாதரத்திற்கு எதிராகத் தீர்மானம்: தனக்குத் தெரியாது என்கிறார் ப. சிதம்பரம்!
புதன், 4 நவம்பர் 2009( 14:22 IST )
புது டெல்லியில் தான் கலந்து கொண்ட ஜாமியாத் உலாமா இ ஹிந்து மாநாட்டில் முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தனக்குத் தெரியாது என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
ஜாமியாத் உலாமா இ ஹிந்து என்ற இஸ்லாமிய மாநாட்டின் 30வது கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்றும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார். இது சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர் கலந்துகொண்ட மாநாட்டில் அவர் முன்னிலையிலேயே வந்தே மாதரம் பாடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எப்படி? இதை ஏன் உள்துறை அமைச்சர் கண்டிக்கவில்லை என்று எதிர்க்கட்சியான பா.ஜ.க. கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சிதம்பரத்தின் உதவியாளர் இன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், நேற்று தியோபாண்டில் நடந்த மாநாட்டில் அமைச்சர் சிதம்பரம் காலை 10 மணி முதல் 12 மணிவரை இருந்தார். அப்போது எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், வந்தே மாதரம் பாடக் கூடாது என்று முஸ்லீம்களை கட்டுப்படுத்தும் தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதும் அமைச்சருக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
இம்மாநாட்டில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையைத்தான் அமைச்சர் சிதம்பரம் படித்தார் என்றும் அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.