முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » சேது சமுத்திர திட்டத்தில் அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல் (Sethusamudram project: SC asks govt to convey its stand)
சேது சமுத்திர திட்டத்தில் அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
புதுடெல்லி, செவ்வாய், 3 நவம்பர் 2009( 17:53 IST )
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்த குழு சமர்ப்பித்த அறிக்கை மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக ராமர் கட்டியதாக கூறப்படும் பாலத்தை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அத்திட்டத்தை மாற்றுப்பாதையில் அமைக்க முடியுமா என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி தலைமையிலான குழுவினரை ஆய்வு செய்யும்படி கூறியதுடன், வழக்கின் தீர்ப்பை கடந்தாண்டு ஜூலை 30ஆம் தேதி தள்ளி வைத்தது.
இந்நிலையில், சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் பஞ்சால் ஆகியோர், “சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த முடியுமா என நிபுணர் குழு ஆராய்ந்து சமர்ப்பித்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர்.
அதுமட்டுமின்றி, அந்த அறிக்கை தற்போது மத்திய அரசின் வசம் உள்ளதால், அந்த அறிக்கை மீதான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும், இவ்விவகாரம் தொடர்பாக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.