சீனா ஒரு வேறுபட்ட, கடினமான நாடு, அப்படிபட்ட ஒரு அண்டை நாட்டை நாம் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம் என்று ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
டேராடூனில் நடைபெற்ற ‘இந்தியாவின் உள்நாட்டு அயல் நாட்டு பாதுகாப்பு’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ராம் மாதவ், “சீனா என்ற இந்த அண்டை நாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது மிக புத்திசாலித்தனமானது, அதற்கென்று தனித்த இராஜதந்திர இலக்குகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.
“எல்லையைப் பொறுத்தவரை, நாம் வரலாற்று ரீதியாக நமது வாதங்களை எடுத்து வைப்போம், அதில் நாம் பற்றுடனும் இருப்போம். ஆனால், நீங்கள் கூறும் அந்த வரலாற்றை சீனா ஏற்காது. இரு நாடுகளின் எல்லையாக மெக்மோகன் கோட்டைக் கூறவீர்கள், அதனை ஏகாதிபத்தியக் கோடு என்று சீனா கூறும். இந்தக் கோட்டைத்தான் திபெத்தை ஆண்டவர்களும், பிரிட்டிஷ் அரசும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளன. ஆனால் சீனா இதை ஏற்காது, அப்படிப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது மக்கள் சீனம் இல்லை, நாங்கள் மெக்மோகன் கோட்டை ஏற்கமாட்டோம் என்று கூறுகிறது. எனவே இப்படிப்பட்ட ஒரு அண்டை நாட்டை கையாள்வதில் பொறுமை தேவை” என்று ராம் மாதவ் கூறியுள்ளார்.