இஸ்ரோவில் இருந்து மனத்திருப்தியுடன் விடைபெறுகிறேன்: மாதவன் நாயர்
பெங்களூரு, வெள்ளி, 30 அக்டோபர் 2009( 11:54 IST )
இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து மன நிறைவுடன் விடைபெறுவதாக விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் பதவியில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்த விஞ்ஞானி மாதவன் நாயர், தனது பதவிக்காலம் நிறைவுற்றதைத் தொடர்ந்து அப்பதவில் இருந்து இம்மாதம் விலகுகிறார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இஸ்ரோவின் சார்பில் ஏராளமான விண்வெளி திட்டங்களை வழிநடத்தியுள்ளேன். அதில் 2 தோல்வியைச் சந்தித்தது. இதற்கு காரணம் மிகப்பெரிய தொழில்நுட்ப கோளாறுகள் அல்ல. சிறிய தவறுகளே காரணம்.
இந்த சிறிய தவறுகள்தான் என்னை மிகவும் வருத்தமடைய வைத்தன. எனினும், அந்த தவறுகள் மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டோம். இந்தியாவின் முதல் நிலவு ஆய்வுக் கலத்தை (சந்திராயன்) சாத்தியப்படுத்தியதை எனது பணிக்காலத்தில் முக்கிய மைல்கல்லாக கருதுகிறேன். இஸ்ரோ தலைவர் பதவியில் இருந்து முழு மனத்திருப்தியுடன் விலகுகிறேன்” என்றார்.