அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பிமாஜுலி என்ற இடத்தில் ரஞ்சன் தைமாரி தலைமையிலான் போரோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகள் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
சோனிட்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 9 பேர் காயமுற்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் நேபாள மற்றும் அஸ்ஸாமி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தாக்குதலைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் அஸ்ஸாம் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்கள் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நவீன ரக துப்பாக்கிகளைக் கொண்டு தீவிரவாதிகள் நேற்று மாலை 6.30 மணி முதல் அத்துமீறி சுட்டதில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், 5 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.