ரயில் பயணத்தை மகிழ்ச்சியான அனுபவமாக்கும் வகையிலான ரயில்வே பட்ஜெட்டை மிகக் குறுகிய காலத்திற்குள் தயாரித்து மம்தா பானர்ஜி தாக்கல் செய்திருப்பதாக பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார்.
மிகச்சிறந்த ரயில்வே பட்ஜெட்டை வெளியிட்டதன் மூலம் திறமையான பணியை மம்தா மேற்கொண்டிருப்பதாக புதுடெல்லியில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சரக்குக் கட்டணம், பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாதன் மூலம் மம்தா பானர்ஜி யாருக்கும் எந்த சுமையையும் ஏற்படுத்தவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தேர்தல் வாக்குறுதிகளை மனதில் வைத்து, பாதுகாப்பான ரயில் பயணம் போன்ற பயணிகளுக்கான வசதிகளைக் கவனத்தில் கொண்டு மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக பயணிகளுக்கு அமையும் வகையில் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பொதுத்துறை தனியார் பங்களிப்பு, ரயில்வே உற்பத்தியை மேம்படுத்துதல், ஆக்கப்பூர்வ நிதி முறை போன்ற எண்ணற்ற வசதிகளையும் ரயில்வே அமைச்சர் வெளியிட்டிருப்பதாகவும் பிரதமர் பாராட்டினார். |