மேற்கு வங்க மாநிலம் கஞ்ரபாரா என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 பெட்டிகளை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் புதிய ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இதனை அத்துறைக்கான அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள்:
காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன சேமிப்புக் கிடங்குக்ளை ரயில்வே உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தனியார் ரயில் சரக்கு முனையங்களை கட்டுவது மற்றும் செயல்படுத்துவது குறித்து புதிய கொள்கை வெளியிடப்படும்.
டெல்லி - சென்னை, டெல்லி - மும்பை இடையே பார்சல்களை ஏற்றிச் செல்ல அதிவேக எக்ஸ்பிரஸ் (Superfast Express) ரயில்கள் முன்னோடி திட்ட அடிப்படையில் தொடங்கப்படும்.
தொழிற்சாலைகளுக்காக பயன்படுத்தும் வகையில், நில வங்கிகளை ரயில்வே ஏற்படுத்தும்.
மேற்கு வங்க மாநிலம் கஞ்ரபாரா என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யக்கூடிய வகையிலான, வடிவமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய ரயில்பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
ரேபரேலியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்பெட்டி தொழிற்சாலை பணிகள் விரைவுபடுத்தப்படும்.
ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் கூடிய மின்சார உற்பத்தி நிலையத்தை ரயில்வே அமைக்க முடிவு செய்துள்ளது.
நடப்பு 2009 -10 ஆம் நிதியாண்டிற்கான ரயில்வே சரக்கு கையாளும் இலக்கு 882 மில்லியன் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 39 மில்லியன் டன் ஆகும்.
அமைப்புசாரா துறையைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு 25 ரூபாயில் `இஸாத்' (respect) எனப்படும் புதிய மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அவர்கள் 100 கி.மீ. தூரம் வரை இந்த மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரசின் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையுடன் கூடிய கடன் அட்டைகள் வழங்கப்படும். அவர்களுக்கான கட்டணச் சலுகை தற்போதுள்ள 30 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் மகளிருக்கான சிறப்பு புறநகர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
புறப்படும் இடத்தில் இருந்து வேறு எங்கும் நிற்காமல், குறிப்பிட்ட இடத்தை சென்றடையும் வகையில் 12 பாயிண்ட் டூ பாயிண்ட் ரயில்கள் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
ஹவுரா - மும்பை, டெல்லி - லக்னோ, டெல்லி - சென்னை, டெல்லி - புனே, டெல்லி - அலகாபாத், ஹவுரா - டெல்லி, ஷீல்டா - டெல்லி, எர்ணாகுளம் - டெல்லி ஆகிய வழித்தடங்களில் இந்த பாயிண்ட் டூ பாயிண்ட் ரயில்கள் இயக்கப்படும்.
தட்கல் முறையிலான ரயில்வே முன்பதிவு தற்போதுள்ள 5 நாட்களுக்கு முன் என்றிருப்பதை 2 நாட்களாக குறைக்கப்படும்.
சமுதாய ரீதியில் தேவைப்படும், அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் அத்தியாவசியமான ரயில்வே திட்டங்களை அமல்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சருக்கு (மம்தா பானர்ஜி) யோசனை தெரிவிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
ரயில் பயணிகளுக்கு மிகச் சிறந்த வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு மற்றும் சிறந்த தரத்திலான உணவு, குடிநீர் வழங்குவதே தமது முன்னுரிமைகள் என்று மம்தா பானர்ஜி ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல், புதுடெல்லி, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையங்கள் உட்பட 50 ரயில் நிலையங்கள் உலக தரத்திலான ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும்.
நாடு முழுவதும் சிறந்த ரயில் இணைப்பு சேவையை விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார். |