ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. அங்கு வரும் 18ஆம் தேதியுடன் 6 மாத கால குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், எந்தவொரு அணியும் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
இதனால் மேலும் 6 மாத காலத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை மத்திய அமைச்சரவை அளிக்கும் என்று புதுடெல்லியில் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, கடந்த 16ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சையது சிப்தே ரஸியிடம் இருந்து வந்த அறிக்கையின் படி குடியரசுத் தலைவர் ஆட்சியை தொடர்வது என்று முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பதாகவும், எந்தவொரு கட்சியுமோ அல்லது அணியோ ஆட்சியமைக்க இதுவரை உரிமை கோரவில்லை என்று ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அம்பிகா சோனி தெரிவித்தார்.
ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான அரசின் பரிந்துரை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றார் அவர்.
|