மேற்கு வங்க மாநிலத்தில் லால்கார் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், மாநில அரசு அப்பகுதியில் பள்ளிகளை மீண்டும் தொடங்குதல், குடிநீர் வழங்கல், மருத்துவமனை சேவை ஆகிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநில பொது சுகாதாரத் துறை செயலாளர் சவுரவ் தாஸ் இதுபற்றிக் கூறுகையில், லால்காரில் இருந்து மேதினிப்பூருக்கு 6 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், தொடர்ந்து படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பள்ளிகளில் விரைவில் வகுப்புகள் தொடங்கும் என்றும், இலவச பாடப்புத்தகங்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக் கட்டிடங்களில் உள்ள காவல்துறை முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் என்றும், தற்போதைக்கு 50 மகளிர் காவல்துறையினர் உட்பட 900 காவலர்கள் லால்காரில் பணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
லால்காரில் உள்ள மருத்துவமனையில் ஒரு டாக்டர் உள்ளதாகவும், தொடர்ந்து இந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் சவ்ரவ் தெரிவித்தார். |