உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலையை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு இன்று அறிவித்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையுயர்வைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஓரளவு ஈடுகட்டும் வகையில், பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையுயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவையில், இப்பிரச்சினை எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தவிர ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, திருணாமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையுயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் விலையுயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால் விலையுயர்வை திரும்பப் பெற இயலாது என்று மத்திய அரசு நிராகரித்து விட்டது.
மக்களவை இன்று காலையில் கூடியதும் பெட்ரோ. டீசல் விலையுயர்த்தப்பட்டது குறித்த பிரச்சினையை சமாஜ்வாடி உறுப்பினர்களும், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் எழுப்பிப் பேசினார்கள்.
அவர்களுக்கு பாஜக, சிவசேனா, ஆர்ஜேடி, பிஎஸ்பி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து ஏற்பட்ட கூச்சல்-குழப்பத்தால் கேள்வி நேரத்தின்போது அவை நடவடிக்கைகள் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மக்களவை கூடிய போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடவே அவைத் தலைவர் மீரா குமார் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
அவை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பாக பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், பெட்ரோல், டீசலின் விலையுயர்வை திரும்பப் பெற முடியாது என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் யோசனைகளை ஏற்க வேண்டுமானால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைய வேண்டும் என்று தியோரா கூறினார். |