வங்கி மேலாளரை கன்னத்தில் அடித்ததாகக் கூறப்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குற்றச்சாற்றுக்கு ஆளான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன்னாத், மேலாளரிடம் நிபந்தனையற்ற மனனிப்பு கோரினார்.
கிராமப்புற வங்கி மேலாளர் ரவீந்தர் ரெட்டிக்கு எதிராக தனக்கு தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும், அந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ள ஜெகன்னாத், உண்மை பின்னர் வெளிவரும். என்றாலும் மேலாளரிடம் தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்தார்.
வங்கி மேலாளரை அடித்த விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர விவகாரங்களுக்கான மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி ஆகியோரைச் சந்தித்து ஜெகன்னாத் விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கோரி ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீனிவாசுக்கு மேலிடம் உத்தரவிட்டது.
இதனிடையே ஜெகன்னாத் கூறுகையில், வங்கியில் இருந்து எஸ்.சி/எஸ்.டி பயனாளிகளுக்கு கடன் தொகையை மேலாளர் அனுமதிக்கவில்லை என்ற புகாரின் பேரில் தாம் அவரிடம் பேசிய போது, அவர் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகத் தெரிவித்தார்.
மேலாளரின் தோளில் தாம் கை வைக்க முயன்ற போது, அவர் திரும்பியதால், தனது கை அவரது கன்னத்தில் பட்டதாகவும், இது அவரை அடித்ததாக தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் ஜெகன்னாத் கூறினார்.
|