பீகார் மாநிலத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், குற்றம்சாற்றப்பட்டிருக்கும் 48 பேரில் 16 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் கால்நடைத்துறை மண்டல இயக்குனர் கீர்த்தி நாராயணன் ஜா-வுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 8 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி மண்டல முன்னாள் கால்நடைத்துறை இயக்குனர் ஜூனுல் பெங்ராஜூக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கால்நடைத் துறை முன்னாள் திட்ட உதவி இயக்குனர் பிரசாத்திற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 34 லட்சம் ரூபாய் அபராதமும், பட்ஜெட் மற்றும் கணக்கு அதிகாரியாக இருந்த பி.பி. சிங்கிற்கு 6 ஆண்டு சிறைத் தண்டனையும் 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டிருப்பதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுக் கழகம் இந்த வழக்கில் 56 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இவர்களில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் உயிரிழந்து விட்டனர். 2 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டு விட்டது. 3 பேர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எஞ்சிய 48 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. தற்போது 16 பேருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஞ்சியில் நடைபெறும் 31ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு இதுவாகும். |