மூன்று புதிய அணு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படவிருப்பதன் மூலம், 2009 ஆம் ஆண்டு நமது நாட்டின் அணு மின் உற்பத்தி மேலும் 1,500 மெகா வாட் அதிகரிக்கும் என்று அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று இந்திய மின் கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், "அடுத்த ஆண்டு மேலும் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படவிருக்கின்றன. இதனால் ஒட்டுமொத்த அணு மின் உற்பத்தி மேலும் 1,500 மெகா வாட் அதிகரிக்கும்" என்றார்.
நமது நாட்டின் ஒட்டுமொத்த அணு மின் உற்பத்தித் திறன் 4,120 மெகா வாட் ஆகும். ஆனால் அணு எரிபொருள் பற்றாக்குறையின் காரணமாக நமது நாட்டின் அணு மின் நிலையங்கள் அவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் பாதிதான் இயங்கி வருகின்றன என்ற ககோட்கர், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்நிலைமை மேம்படும் என்றார்.
வருகிற 2020 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் மின்சாரத்தை அணு சக்தி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் நாம் இயங்கி வருகிறோம். இதில் 50 விழுக்காட்டிற்கும் மேல் முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழுத்தப்பட்ட கன நீர் உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றார் அவர். |