மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் (CST) கடந்த 26ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்றார். சிறப்பு பரிசு : பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய போது தக்க சமயத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏராளமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சி.எஸ்.டி. ரயில் நிலைய ஊழியர்கள் விஷ்ணு தத்தாரம் ஜான்டே, ஜுல்லு யாதவ் ஆகியோருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் லாலு அறிவித்தார்.ரயில் நிலையத்தில் அறிவிப்பாளராக இருக்கும் ஜான்டே, துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேறும் படி உடனடியாக அறிவித்தார். அதே போல் தலைமை காவலராக பணிபுரியும் யாதவ் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற உதவினார்.சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரவாதிகளின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், தலைமை பயணச் சீட்டு வசூலிப்பாளர் எஸ். கே. ஷர்மா, துப்புரவுத் தொழிலாளி ஹர்கல் சோலங்கி, பிட்டர் அயுப் ஷேக் ஆகிய 3 ரயில்வே ஊழியர்கள் உள்பட 58 பேர் பலியாயினர். மேலும் 3 ரயில்வே ஊழியர்கள் உள்பட 95 பேர் காயமடைந்தனர். |