ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு நிலை திரும்பத் துவங்கியதை முன்னிட்டு ஜம்மு பகுதியில் உள்ள, ஜம்மு, சம்பா, உதம்பூர், கிஸ்த்வார் ஆகிய மவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் அதிகாலை 5.00 மணி முதல் 15 மணி நேரத்திற்கும், சம்பாவில் 9 மணி நேரத்திற்கும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
உதம்பூரில் அதிகாலை 5.00 மணி முதல் 17 மணி நேரத்திற்கும், பதற்றம் நிறைந்த கிஸ்த்வார் மாவட்டத்தில் காலை 7.00 மணி முதல் 3 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி அறிவித்துள்ள மூன்று நாள் சிறை நிரப்பும் போராட்டம் இன்று இரண்டாவது நாளை அடைந்துள்ளது. நேற்று துவங்கிய போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தங்களது போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை எந்தப் பேச்சிலும் பங்கேற்க மாட்டோம் என்று சமிதியின் ஓருங்கிணைப்பாளர் லீலா கரண் சர்மா மாநில அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநில ஆளுநர் என்.என்.வோராவின் முதன்மைச் செயலர் பி.பி.வியாசிடம் தங்களது முடிவைத் தெரிவித்துள்ளதாகவும் லீலா கரண் சர்மா கூறினார். |