மக்களவை உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளையும் அவற்றை மீறும் உறுப்பினர்களுக்கு விதிக்கவேண்டிய 4 தண்டனைகளையும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதன்படி விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பிறகு கண்டனம் தெரிவிக்கப்படும். இதையடுத்து குறிப்பிட்டகால இடை நீக்கம் தண்டனையாக வழங்கப்படும். இவை எதற்கும் கட்டுப்படாத உறுப்பினர்கள் அவையிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார்கள்.
9 ஒழுங்கு விதிகள்!
மக்களவை நடத்தை விதிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட வி. கிஷோர் சந்திர தியோ தலைமையிலான குழு மக்களவையில் இன்று சமர்ப்பித்த இரண்டாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு:
மக்களவை உறுப்பினர்கள் தங்களது நாடாளுமன்ற அலுவல்கள், பொதுமக்கள் சார்ந்த அலுவல்களை மேற்கொள்ளும்போது 9 பொதுவான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். 1.முறையான நடத்தை: உறுப்பினர்கள் முடிவெடுக்கும்போதும் அவற்றைச் செயல்படுத்தும்போதும் காரண காரியத்துடன் பொறுப்புடன் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும்.
2. நேர்மை: உறுப்பினர்களின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்கு சாதகமாக இருப்பதாகப் புகார் எழுப்பபடும் பட்சத்தில் அதுபற்றி விளக்கமளிக்க வேண்டும். தங்கள் நலனைப் பொதுமக்களின் நலனிற்கு உட்படுத்திச் செயல்பட வேண்டும்.
3. நாணயம்: உறுப்பினர்கள் மிகவும் நாணயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தாங்கள் செயல்படும்போது பொருளாதார ரீதியிலோ, தனிப்பட்ட வேறு காரணங்களுக்காகவோ வெளியாட்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் பணியைப் பாதிக்காத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்.
4. மனசாட்சியுடன் செயல்படல்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொந்தக் கடமைகளை மேற்கொள்ளும்போது முக்கியத்துவதத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும்.
5. வெளிப்படைத் தன்மை: உறுப்பினர்கள் தங்கள் நடவடிக்கைகளில் முடிந்தவரை வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் தங்கள் முடிவுகளின் உண்மைத் தன்மையை சோதனைக்கு உட்படுத்தத் தயங்கக் கூடாது.
|