விடுதலை கேட்டுப் போராடும் திபெத்தியர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில், வரலாறு காணாத பாதுகாப்புடன் தலைநகர் டெல்லியில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் ‘வெற்றிகரமாக’ நடந்து முடிந்தது.
பலத்த பாதுகாப்பையும் மீறி ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்கு இடையூறு செய்ய முயன்ற நூற்றுக்கும் அதிகமான திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் 5 கண்டங்களிலும் உள்ள 21 முக்கிய நகரங்களில் 1,37,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு 97 நாட்களில் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
சீன அடக்குமுறையை எதிர்த்தும் திபெத்தின் விடுதலையை வலியுறுத்தியும் போராடி வரும் திபெத்தியர்கள், சீனா நடத்தும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக் சுடர் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
லண்டன், பாரீஸ் நகரங்களில் திபெத்தியர்கள் நடத்திய போராட்டத்தினால் ஒலிம்பிக் சுடர் 4 முறைக்கும் மேல் அணைக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக் சுடர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தில் வண்ணமயமான வரவேற்பு!
இந்நிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் சுடர் வரலாறு காணாத பாதுகாப்புடன் நேற்று நள்ளிரவு 1.10 மணிக்கு பாகிஸ்தானில் இருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது.
இந்தியா, சீனாவைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் வண்ணமயமான உடைகளை அணிந்தும், வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டும் ஒலிம்பிக் சுடரை வரவேற்றனர். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புத் தலைவர் சுரேஷ் கல்மாடி, சீனத் தூதர் ஜாங் யான் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
பின்னர் ஒலிம்பிக் சுடர் பலத்த பாதுகாப்பிற்கு இடையே தொடர் ஓட்டம் நடக்கும் ராஜபாதையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
3 அடுக்குப் பாதுகாப்பில் தொடர் ஓட்டம்!
குடியரசு நாள் அணிவகுப்பைப் போல 3 அடுக்குப் பாதுகாப்பின் கீழ் ரைசினா ஹில் பகுதியில் நடந்த விழாவில் பீஜிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுத் துணைத் தலைவர் ஜியாங் யு ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார்.
பின்னர் அதை டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீக்ஷித் பெற்று இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் வழங்கினார். இதைடுத்து சரியாக மாலை 4.45 மணியளவில் முன்னாள் மல்யுத்த வீரர் சத்பால் முதல் ஆளாக ஒலிம்பிக் சுடரை ஏந்தி 2.3 கி.மீ தொடர் ஓட்டத்தைத் துவக்கி வைத்தார்.
|