ஹெச்- 1பி விசா விண்ணப்பங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏற்பு
புதன், 10 மார்ச் 2010( 11:44 IST )
2011ஆம் ஆண்டிற்கான, ஹெச்-1பி அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை மையம், அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததன் படி சுமார் 65,000 விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளது.
அமெரிக்க முதுநிலை பட்டம் அல்லது அதற்கு மேலான பட்டப்படிப்பு பெற்றவர்கள் சார்பாக விண்ணப்பிக்கப்பட்ட முதல் 20,000 ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் இந்த 65,000 விண்ணப்பங்கள் கணக்கில் சேராது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு ஹெச்-1பி விசாக்கள்தான் வழங்கப்படும் என்ற உச்சவரம்பிலிருந்து, உயர்கல்வி நிலையங்களுக்கு பணியாற்ற வரும் நபர்கள், லாப நோக்கற்ற நிறுவனங்களில் பணியாற்ற வருபவர்கள், லாப நோக்கல்லாத ஆய்வு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பணியாற்ற வருபவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படும். அதாவது இவர்கள் ஹெச்-1பி விசாவிற்காக விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்க நாடாளுமன்றம் விதித்த உச்சவரம்பு இவர்களைக் கட்டுப்படுத்தாது.
ஹெச்-1பி விசாக்களைப் பெறுவதில் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முன்னிலை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.