உல்ஃபாவுக்கு ஆயுதக்கடத்தல்: முன்னாள் வங்கதேச பிரதமர் மகனுக்கு தொடர்பு
டாக்கா, திங்கள், 8 பிப்ரவரி 2010( 16:33 IST )
தோல்வியில் முடிந்த ஆயுதக் கடத்தல் முயற்சி ஒன்றில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள உல்ஃபா இயக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கடத்தல் முயற்சியிலேயே கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக, பிடிபட்ட குற்றவாளி ஒருவர் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் உல்ஃபா தீவிரவாதிகளுக்காக கடத்தப்பட இருந்த பெருமளவிலான ஆயுதங்களை பங்காளதேஷ் காவல்துறையினர் கைப்பற்றி, கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக பிடிபட்ட ஹஃபீஷுர் ரஹ்மான் என்ற நபர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று உல்ஃபா தலைவர் பரேஸ் பரூவாவை, கலீதா ஜியா மகன் தாரிக் ரஹ்மானுடன் சந்தித்ததாக கூறியுள்ளார்.
இதுதவிர மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளையும் தாம் சந்தித்ததாக ஹஃபீஷ் தெரிவித்ததாகவும் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாக டாக்காவைச் சேர்ந்த அரசு செய்தி நிறுவனமான பிஎஸ்எஸ் கூறியுள்ளது.