தீவிரவாதி ஹெட்லியுடன் தொடர்பு : பாக். இராணுவ அதிகாரி கைது
இஸ்லாமாபாத், புதன், 25 நவம்பர் 2009( 15:27 IST )
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹெட்லி மற்றும் ராணா ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வு ஏஜென்சியான எப்பிஐ - யால் அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மற்றும் ஹுசேன் ராணா ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இரண்டு பேரும் அல் காய்தா தீவிரவாத இயக்கத்தின் உத்தரவின்பேரில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக எப்பிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மேற்கூறிய தீவிரவாதிகள் இரண்டு பேருடனும் தொடர்பு வைத்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர், பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்ற இவர், தற்போது ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் இராணுவ தலைமை பேச்சாளர் மேஜர் ஜெனரல் அப்பாஸ் தெரிவித்தார்.
அதே சமயம் ஹெட்லியுடன் தொடர்புடைய ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்த அவர், இது பாகிஸ்தான் இராணுவத்தை சங்கடப்படுத்த முயற்சிப்பவர்களின் கட்டுக்கதை என்றார்.