இந்திய பிரதமர் பதவிக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை: மன்மோகன்
வாஷிங்டன், திங்கள், 23 நவம்பர் 2009( 10:44 IST )
இந்தியாவை வழிநடத்திச் செல்லும் தலைமைப் (பிரதமர்) பதவிக்கு வருவேன் என ஒரு போதும் எண்ணியதில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “இந்த நிலையை (பிரதமர் பதவி) எட்டுவேன் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. நான் இன்று வரை நானாகவே இருக்கிறேன். அதற்கு எனக்கு கிடைத்த கல்வியே காரணம்.
சாதாரண பின்புலத்துடன் இருந்த நான் இன்று இந்தியாவின் பிரதமராக இருப்பதற்கு நாட்டின் ஜனநாயக முறையே காரணம்” என்றார்.
இந்திய ஜனநாயகத்திடம் இருந்து உலக நாடுகள் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்கு, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுடன், நாட்டில் நிலவும் வறுமை, எழுத்தறிவின்மை, சுகாதாரக் குறைபாடுகள் ஆகிய பிரச்சனைகளை இந்தியா சமாளித்தால் அதுவே உலகிற்கு நல்ல செய்தியாக இருக்கும்” என்றார்.