முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » உலகச் செய்திகள் » இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டுவதே பாக்.கின் கொள்கை: மன்மோகன் சிங் (Pakistan using terror as instrument of state policy, says Manmohan)
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டுவதே பாக்.கின் கொள்கை: மன்மோகன் சிங்
புதுடெல்லி, சனி, 21 நவம்பர் 2009( 11:08 IST )
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டுவதையே பாகிஸ்தான் தனது கொள்கையாக வைத்துள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாற்றியுள்ளார்.
அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான் அரசு ஆதரவளிக்கும் பயங்கரவாத குழுக்களால் கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் (இந்தியா) பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் ஒரு கொள்கையாக கடைப்பிடித்து வருவது மிகவும் சோகமானது.
தனது நாட்டில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஒழிப்பதில் கூட பாகிஸ்தான் அரசு அக்கறை காட்டவில்லை. மும்பைத் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் இதுவரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக உளவுத்துறை மூலம் எனக்கு தினமும் தகவல் வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையிலும் பாகிஸ்தான் அரசு முழு மனதுடன் ஈடுபடவில்லை. எப்போதெல்லாம் தனது ராணுவத்தின் கௌரவத்திற்கு பங்கம் வருகிறதோ அப்போது மட்டும் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தனது மண்ணில் இடமளிக்காது எனக் கூறியதை அந்நாட்டு அரசு உண்மையாக கடைபிடித்தால், பாகிஸ்தான் உடனான அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது” என பிரதமர் கூறியுள்ளார்.