தற்போது பெய்துவருகின்ற அடை மழை காரணமாக இலங்கை வவுனியா மானிக்பாம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்கள் பெரும் சிரமத்திற்குளளாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களுக்குள் மழைநீர் புகுந்ததாலும், தூவானம் காரணமாகவும் கூடாரங்களில் இருக்கவோ,படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கல்விக்கூடங்கள், பொது மண்டபங்கள் போன்றவற்றில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து மீள்குடியேற்றத்திற்காக வருகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
முகாம்களில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மழையென்றும் பாராமல் இரவோடு இரவாக மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குரிய மாவட்டங்களின் பொது இடங்களில் இறக்கி விடப்படுகி்ன்றனர்.அப்போது பெய்து வரும் மழை காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூட்டை முடிச்சுகளுடன் வரும் இவர்கள்,உரிய பயண முன்னேற்பாடுகள் இல்லாததனாலும், பலருக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் உரிய நேரத்தில் வரமுடியாதிருப்பதனாலும் சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டியிருப்பதாக முகாம்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.