இலங்கை இராணுவ உயரதிகாரிகளுக்கு ஜரோ.ஒன்றியம் பயணத்தடை
சனி, 7 நவம்பர் 2009( 13:05 IST )
இலங்கை இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஜரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தடைவிதிக்கும் சட்டவரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
ஐ.நா. மற்றும் காமன்வெலத் நாடுகளின் தலைமைச் செயலகங்களில் இது குறித்து கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வரைவை அமெரிக்கா ஆதரிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனால் முன்மொழியப்பட்ட இந்த பிரேரணை காமன்வெலத் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஜக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிலும் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தால் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா இந்தப் பயணத்தடையை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் போர்க் குற்றம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தும்வரை இந்த பயணத்தடை அமலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.