விடுதலைப்புலிகளால் முஸ்லீம்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது : ராஜ பக்ச
கொழும்பு, வெள்ளி, 6 நவம்பர் 2009( 16:28 IST )
விடுதலைப்புலிகளால் முஸ்லீம்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவர்கள் சொந்த ஊரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதாக இலங்கை அதிபர் ராஜ பக்ச குற்றம் சாற்றியுள்ளார்.
கொழும்பில் உள்ள தமது அரசு இல்லத்தில் தம்மை சந்தித்த இஸ்லாமிய பெண்கள் மத்தியில் பேசுகையில் இக்குற்றச்சாற்றைக் கூறிய அவர்,மற்ற சமுதாயத்தினருடன் இணைந்து அமைதியாக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தினர்,விடுதலைப்புலிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது பாதிப்புக்குள்ளானதாக குற்றம் சாற்றினார்.
முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களை விரட்டியடித்ததன் மூலம் சமூக நல்லிணக்கத்தை சிதறிடிக்க புலிகள் முயன்றனர்.
விரட்டியடிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் தற்போது புத்தாளம் மாவட்ட அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர்.அவர்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விரைவிலேயே அவர்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்படுவார்கள்.
இலங்கையில் வாழும் பல்வேறு சமூகங்களிடையே காணப்படும் நல்லிணக்கம் மிகவும் வலிமையானதாக உள்ளது." உத்துரு வசந்தாயா " ( வடக்கில் வசந்தம் ) திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று ராஜ பகச மேலும் கூறினார்.