திபெத்திய மத தலைவர் தலாய் லாமா அருணாச்சல் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ள அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
நாளை முதல் தலாய் லாமா அருணாச்சல் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது இந்த பயணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா,லாமாவின் இந்த பயணம்,சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல் என்றும்,இந்தியாவுடனான சீன நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் மா ஷாக்ஸூ பீஜிங்கில் கூறியிருந்தார்.
ஆனால் சீனாவின் இந்த எதிர்ப்பு தமக்கு வருத்தமளிப்பதாக உள்ளதாக கூறியிருந்த தலாய் லாமா,தமது பயணம் ஆன்மீக பயணம் மட்டுமே என்றும்,அரசியல் நோக்கத்திலான பயணம் அல்ல என்றும் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில்,லாமாவின் அருணாச்சல் பிரதேச பயணத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான செயலர் மரியா ஒட்டெரோ,அவர் ( தலாய் லாமா ) ஒரு மத தலைவர் என்பதால் அவர் விரும்பிய இடத்திற்கு செல்ல அவருக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தார்.