நாடு திரும்பிய ததேகூ உறுப்பினர்களிடம் இலங்கை போலீசார் விசாரணை
கொழும்பு , புதன், 4 நவம்பர் 2009( 19:13 IST )
தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று நாடு திரும்பிய நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் இருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தங்கியிருந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், லண்டனில் தங்கியிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே இன்று நாடு திரும்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலும்,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இரு வருடங்களுக்கு மேலாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தங்கியிருந்து இறுதியாக லண்டனிலும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நாடு திரும்பிய அவர்கள் இருவரும்,விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,பின்னர் அந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இவர்கள் அரசாங்கத்தால் கைது செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.