திபெத்திய தலைவர் தலாய் லாமா அருணாச்சல் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மீண்டும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது ஜப்பானில் இருக்கும் தலாய் லாமா, வருகிற 18 ஆம் தேதியன்று அருணாச்சல் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அவரது இந்த பயணம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே சீனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
சீனாவின் இந்த எதிர்ப்பு தமக்கு வருத்தமளிப்பதாக உள்ளதாக கூறியிருந்த தலாய் லாமா,தமது பயணம் ஆன்மீக பயணம் மட்டுமே என்றும்,அரசியல் நோக்கத்திலான பயணம் அல்ல என்றும் விளக்கமளித்திருந்தார்.
இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் தலாய் லாமா மீது சீனா மீண்டும் பாய்ச்சல் காட்டியுள்ளது.அவரது இந்த பயணம் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல் என்று சீன அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் மா ஷாக்ஸூ பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலாய் லாமாவின் இந்த நடவடிக்கை,இந்தியாவுடனான சீன நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.