ஐ.நா. வில் காஷ்மீர் பிரச்னை : பாக்.கிற்கு இந்தியா எதிர்ப்பு
ஐ.நா. , செவ்வாய், 3 நவம்பர் 2009( 15:21 IST )
ஐ.நா. சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மனிதாபிமான பிரச்னைகளுக்கான ஐ.நா. குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,பாகிஸ்தானுக்கான நிரந்தர பிரதிநிதியாக செயல்படும் அம்ஜத் ஹுசேன் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி,ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களுக்கு சுயாட்சிக்கான உரிமை மறுக்கப்படுவதாக குற்றம் சாற்றினார்.
தெற்காசியாவின் வளர்ச்சி,ஸ்திரத்தன்மை, நிரந்தர அமைதி ஆகியவற்றுக்கு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது என்றும்,அதே சமயம் இந்தியாவுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அவரது இந்த பேச்சுக்கு இந்தியா தரப்பில் கூட்டத்தில் கலந்து க்ண்ட காங்கிரஸ் எம்.பி. ஹரிபிரசாத் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு,ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ள நிலையில் அப்பிரச்னை குறித்து எழுப்ப பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றார்.