வாஷிங்டன் / கொழும்பு, திங்கள், 2 நவம்பர் 2009( 16:55 IST )
இலங்கை முன்னாள் இராணுவ தலைமை தளபதியும், தற்போதைய முப்படை கூட்டுத தளபதியுமான சரத் பொன்சேகாவிடம், போர் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த போரின்போது,போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.
மே 2 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அயலுறவுத் துறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்கும் நோக்கத்துடன் பொன்சேகா,தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அவரது இந்த வருகையை பயன்படுத்தி,இலங்கையின் போர் குற்றம் தொடர்பாக பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபயா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார் மற்றும் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
வருகிற புதன்கிழமையன்று பொன்சேகாவிடம் அவர்கள் இது குறித்து விசாரண நடத்த உள்ளனர்.
இதனிடையே தம்மை அமெரிக்கா விசாரணைக்குட்படுத்த உள்ளது குறித்த தகவலை அமெரிக்காவிலுள்ள தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு தெரியபடுத்தியுள்ளார் பொன்சேகா.இதனையடுத்து அவருக்கு சட்ட ரீதியாக உதவ அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளது இலங்கை தூதரகம்.