காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண பாக். விரும்புகிறது : கிலானி
இஸ்லாமாபாத் , திங்கள், 2 நவம்பர் 2009( 15:47 IST )
காஷ்மீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று தம்மை சந்தித்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி ராஜா ஜுல்ஹர்கர்னாய்ன் கான் மற்றும் புதித்தாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ராஜா முகமத் ஃபரூக் ஆகியோருடன் பேசுகையிலேயே கிலானி இவ்வாறு தெரிவித்ததாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்னையில் ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையுடன் உள்ளதோடு,இப்பிராந்தியத்தில் நிரந்தர அமைதி நிலவ காஷ்மீர் மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிற்து.
காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் கொள்கை நிலையில் மாற்றமில்லை.காஷ்மீர் மக்களுக்கான அரசியல்,தார்மீக மற்றும் தூதரக ரீதியிலான எங்களது ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என கிலானி அவர்களிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சமீபத்தில் தாம் சந்தித்த பல்வேறு உலக தலைவர்களிடம் பேசுகையிலும்,காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தியதாகவும் கிலானி மேலும் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.