திபெத் குறித்த கண்காட்சிக்கு வங்கதேச அரசு திடீர் தடை
டாக்கா , திங்கள், 2 நவம்பர் 2009( 14:11 IST )
சீனாவின் நிர்ப்பந்தம் காரணமாக திபெத் குறித்த புகைப்பட கண்காட்சி நடத்த வங்கதேச அரசு திடீர் தடை விதித்தது.
தலைநகர் டாக்காவில் உள்ள தான்மோந்தி என்ற இடத்தில் திபெத்தியர்கள் சீன அரசால் படும் துயரை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்த தகவல் டாக்காவிலுள்ள தூதரக அதிகாரி மூலம் கிடைத்ததையடுத்து,சீன அரசு வங்கதேச அரசை தொடர்புகொண்டு அக்கண்காட்சியை நடத்துவதற்கான அனுமதியை ரத்து செய்யுமாறு வற்புறுத்தியது.
இதனையடுத்து அந்த நிர்ப்பந்தத்திற்கு பணிந்த வங்கதேச அரசு,இது குறித்து காவல் துறைக்கு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து,கண்காட்சி நடத்துவதற்கான அனுமதியை போலீஸார் ரத்து செய்து,அதனை நடத்த தடை விதித்தனர்.
அத்துடன் டாக்காவிலுள்ள சீன தூதரக அதிகாரிகளும் கண்காட்சி அரங்கத்திற்கு சென்று அதனை நடத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டனர்.
இதனால் அந்த கண்காட்சிக்கு ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இருப்பினும் அவர்கள் அந்த தடையை மீறி அனுமதியளிக்கப்பட்டிருந்த அரங்கத்திற்கு வெளியே அந்த கண்காட்சியை நடத்த முற்பட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.