லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் பெடரல் விசாரணை அமைப்பு கட்டிடத்தின் மீதும், காவல்துறை பயிற்சி மையங்கள் இரண்டிலும் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நீடித்தது.
காலை 9.15 மணியளவில் தீவிரவாதிகளின் 3 குழுவினர் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை அலுவலகக் கட்டிடத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், தொடர்ந்து பெடியன் சாலையிலும், மனவான் எந்த இடத்திலும் உள்ள காவல்துறை பயிற்சி மையங்களிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகளை முறியடிப்பதற்காக பதில் தாக்குதல் நடத்தியதாகவும், சுமார் 2 மணி நேர மோதலுக்குப் பின்ற் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் லாகூர் காவல் ஆணையர் குஸ்ரோ பர்வேஸ் தெரிவித்துள்ளார்.
விசாரணை அமைப்பைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரும், தாக்குதல் நடத்திய ஒருவரும் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.