வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் விடுதலைப் புலிகளின் சுவரொட்டிகள் மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதையடுத்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினரும், புலனாய்வுத்துறையின் பிரிவுகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் , இவை எங்கிருந்து வந்தன யாரால் ஒட்டப்பட்டன என்பது குறித்து தீவிரமான விசாரணைகள் தொடங்கியிருப்பதாகவும் காவல்துறையுடன் தொடர்புடைய கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ மற்றும் காவல்துறையின் கண்காணிப்பு இருக்கின்ற அதேவேளையில் புலனாய்வு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான படைத்துறை பிரிவுகளின் அதிகாரிகளும் கடமையாற்றுகின்றனர்.
இந்த முகாம்களில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல்கள் இடம்பெறலாம் என்பதால் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் சிறிலங்கா புலானாய்வுத்துறையின் வெவ்வேறு பிரிவுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் புலனாய்வுத்துறையின் பிரிவு, பயங்கரவாத விசாரணைத்துறை, குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் காவல்துறையின் சிறப்புப் பிரிவு என்பன இந்த முகாம்களில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. |