ஈரான் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரிட்டன தூதரக அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஈரானின் தலைமை அதிகார மையமான மத குருமார்கள் சபை அறிவித்துள்ளது.
ஈரான் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் நடைபெற்றது.
இந்நிலையில், ஈரான் தேர்தல் முறைகேடு தொடர்பாக பிரிட்டன் விமர்சித்ததால் ஆத்திரமடைந்த ஈரான் அரசு , தங்கள் நாட்டிலுள்ள பிரிட்டன் தூதரக அதிகாரிகள் சிலரை கைது செய்தது.
தேர்தலுக்கு பிந்தைய கலவரத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஈரான் குற்றம் சாற்றியிருந்தது.
ஆனால் இக்குற்றச்சாற்றை மறுத்திருந்த பிரிட்டன் , கைது செய்யப்பட்ட தங்களது நாட்டு தூதரக அதிகாரிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 அதிகாரிகளில் ஏழு பேரை மட்டும் ஈரான் விடுதலை செய்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் பிரிட்டன் கூறியிருந்தது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கலவரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை தாங்கள் கைது செய்த பிரிட்டன் தூதரக அதிகாரிகள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஈரானின் தலைமை அதிகார மையமான மத குருமார்கள் சபை அறிவித்துள்ளது. |