மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி அவரது முன்னாள் மனைவி டெப்பி ரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று மரணமடைந்த மைக்கேல் ஜாசன் , இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த உயிலில் , தனது 3 குழந்தைகளையும் தனது தாயார் கேத்தரின் ஜாக்சன் ( 79 ) வளர்க்க வேண்டும் என்றும் , ஒருவேளை அவருக்கு வளர்க்க விருப்பமில்லாமல் போனாலோ அல்லது இயலாமல் போனாலோ தமது நெருங்கிய தோழியான டயானா ரோஸ் வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாக்சனின் முதல் இரண்டு குழந்தைகளான பிரின்ஸ் ( 12 ) மற்றும் பாரிஸ் கேத்தரின் ( 11 ) ஆகியோரை பெற்றெடுத்தவரும், ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான டெப்பி ரோ , குழந்தைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக ' லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜாக்சனை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்த டெப்பி ரோ, பிரின்ஸ் மற்றும் கேத்தரின் ஆகியோரைப் பெற்றெடுத்த பின்னர், திருமணம் ஆன மூன்றாண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்தார்.அத்துடன் குழந்தைகளுக்கான உரிமையை கைவிடுவதற்காக ஜாக்சன் அவருக்கு பல மில்லியன் டாலர் தொகையை கொடுத்தார்.
இந்நிலையில் , ஜாக்சன் மறைந்த சில தினங்கள் கழித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த டெப்பி ரோ , தமது குழந்தைகளான பிரின்ஸ் மற்றும் கேத்தரின் ஆகியோருக்கு ஜாக்சன் தந்தை இல்லை என்றும், அடையாளம் தெரியாத வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்ட உயிரணுக்கள் மூலம் பிறந்தவர்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
ஜாக்சனின் மூன்றாவது குழந்தையான பிரின்ஸ் மைக்கேல் ( 7 ) வாடகைத்தாய் மூலம் பிறந்தது குறிப்பிடத்தக்கது. |