இலங்கை அதிபர் ராஜ பக்ச புதிதாக அமைத்துள்ள தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அனைத்துக் கட்சிக் குழுவின் கூட்டம் இன்று முதல் தடவையாக கொழும்பில் நடைபெறவிருக்கும் வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கான திட்டம் ஒன்றை அரசு தீட்டியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை முன்னெடுப்பதற்கான அனைத்துக்கட்சிகளின் குழு ஒன்றை ராஜபக்ச அமைத்துள்ளார்.அதன் முதலாவது கூட்டம் இன்று ராஜ பக்ச தலைமையில் கொழும்பில் நடைபெறவிருக்கின்றது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் அனைத்துக் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.பொதுவாக இவ்வாறான கூட்டங்களுக்கான அழைப்புக்கள் கட்சியின் செயலாளர்களுக்கே அனுப்பப்படுவது வழக்கம்.கட்சித் தலைமைதான் இக்கூட்டத்தில் கட்சியின் சார்பில் யார் கலந்து கொள்வது என்பதைத் தீர்மானிக்கும்.
இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கும் இந்த அழைப்புக்கள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களில் சிலர் அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே அரசாங்கம் இந்த உபாயத்தைக் கையாண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அண்மைக்காலமாக அரசின் நடவடிக்கைகள் பலவற்றை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்தாலும், தமக்கு ஆதரவான சிலர் இதில் கலந்து கொள்ளலாம் என அரசு கருதுவதாகத் தெரிகின்றது.அதனால்தான் அழைப்புக்கள் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கின்றது.
அதேவேளையில் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.இது தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டம் ஒன்று இன்று நடைபெறவிருக்கின்றது.
அதேவேளையில் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்வது என அதில் தீர்மானிக்கப்பட்டது. |