சிங்கள இனவாத கட்சியின் மிரட்டலையடுத்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை மக்களின் கருத்துக்கணிப்பு மூலமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரே அதனை நடைமுறைப்படுத்தப்போவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பு இன்றி இதனை நடைமுறைப்படுத்த முடியாது என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, நாட்டு மக்களின் சம்மதத்துடனேயே இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தால் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக பிரதான சிங்கள இனவாதக் கட்சியும், அரசாங்கத்தின் பங்காளியுமான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்திருந்த நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுளளது.
அதிபரின் செயலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் இடையேயான கூட்டம் ஒன்றில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், அப்போதே மக்களின் கருத்துக்களை அறிந்த பின்னர்தான் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார். |